பரலோகத்தில் இருக்கிற கடவுளை பத்துக்கு பத்து அறையில் தங்கவைத்து சிம்புதேவன் நடத்தியுள்ள திருவிளையாடல் இது.
தங்கியிருக்கும் மேன்ஷனுக்கு வாடகை தரக்கூட வக்கில்லாத பேச்சிலர் வெட்டி ஆபீசர்கள். சந்தானம், கஞ்சாகருப்பு. சுகபோக வாழ்க்கை கிடைக்காத கோபத்தில் கடவுளின் தாயையே சந்தேகப்பட்டு திட்டும் தெண்டச்சோறுகள் முன் தோன்றுகிறார் கடவுள் (பிரகாஷ்ராஜ்). ஜிப்பா - பேண்ட் மட்டுமே கடவுளின் காஸ்ட்யூம் என்பதால் நம்ப மறுத்து சிரிக்கிறார்கள் சந்தானம் அண்ட் கஞ்சாகருப்பு.
ஒரு சுண்டு விரலின் அசைவால் தன் வல்லமையை காட்ட, பிரகாஷ்ராஜின் காலில் விழுகிறார்கள். உங்களுக்கு உதவுகிறேன் என உறுதிதரும் கடவுள் காசு மட்டும் தரமாட்டேன் என கண்டிஷன் போடுகிறார். இப்போது 305-ம் அறையில் கடவுளும் ஒருவராக, அடுத்து நடக்கும் அரங்கேற்றங்கள் இம்சை பாதி, இன்பம் மீதியாக முடிகிறது.
கடவுள் என்றால் பல உடலுறுப்புகள், கேட்ட வரத்தை வாரிவழங்கும் தன்மை என்ற புராண கால கதைகளையெல்லாம் காதில் செருகாமல் மனிதனுக்குள் இருக்கும் சக்திகளை அடையாளம் காட்டும் முயற்சி பாராட்டுக்குரியது.
கடவுள் உண்டு - இல்லை என்ற பட்டிமன்றங்களுக்கு ராஜேஷ் - பிரகாஷ்ராஜ் செய்யும் தர்க்கங்களில் கிடைக்கும் தெளிவு, இயக்குனரின் புத்திசாலிதனத்தை புரியவைக்கிறது. 'God No Where' என்னும் போர்டை 'God Now Here' மாற்றப்படும் இட்த்திலும் சிம்புதேவன் பளிச்சிடுகிறார்.
உரத்த குரலோ வில்லங்க பார்வையோயின்றி சந்தன வார்த்தைகளும் சாந்தம் நிறைந்த கண்களுமாக பிரகாஷ்ராஜூக்கு கைகுலுக்கவும் செய்யலாம், கை கூப்பவும் செய்யலாம். நாத்திக-ஆத்திக நண்பர்களின் நம்பிக்கையை பொறுத்தது இது.
காதலிக்கு தரும் ரோஜாவை கூட வாடகைக்கு எடுக்கும் காதலனாக கதாநாயகன் வேஷம் கட்டியிருக்கும் சந்தானம் ஒரு பாட்டுக்கு டூயட்டும் ஆடியிருக்கிறார். மற்றபடி என்னயிருக்கிறது சொல்வதற்கு? கஞ்சாகருப்புவுக்கும் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தது கடவுளை பார்ப்பதுபோலத்தான் ஆச்சர்யமளிக்கிறது.
கடவுளின் கேலக்ஸி பாக்ஸை 'சுட்டு'க்கொண்டுபோய் சந்தானமும் - கருப்பும் நிலவில் போடும் ஆட்டம் கலர்ஃபுல் சுவாரஸ்யம். பணம் வந்த பிறகு அவர்களுக்கு கிடைக்கும் பாடம் எல்லோருக்குமானதுதான்.
காலாட்டிக்கொண்டே தூங்காவிட்டால் கடவுள் மேலும் கல் தூக்கிப்போடப்படும் என்பதற்கு கேலக்ஸி பாக்ஸை திருட்டுக்கொடுத்துவிட்டு பிரகாஷ்ராஜ் படும் திண்டாட்டம் சரியான உதாரணம்.
சர்வசக்தி கொண்ட கேலக்ஸி பாக்ஸ் போனபிறகு டீ மாஸ்டராக, கடலை விற்பவராக உழைக்கும் காட்சியிலும் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சியின் பின்னணியிலும் உரைக்கும் விஷயங்கள் நைஸ் பிளாஸபி.
சந்தானத்தின் காதலியாக வந்து விபச்சாரியாக அடையாளப்படுத்திக்கொள்ளும் மதுமிதா, ஆண் துணையின்றி அம்மாவுடன் மெஸ் புகையில் கஷ்டப்படும் ஜோதிர்மயி கேரக்டர்கள் கறிவேப்பிலையின் பயன்பாடுகளாய்...
பழைய ஹீரோஹோண்டாவில் ஆரம்பித்து ஹெல்காப்டரில் வருவது வரையிலான அசுர வளர்ச்சியடையும் சுந்தரேஸ்வரன், கடைசி மூச்சுவரை மேன்சன் காற்றை சுவாசித்து இறக்கும் வி.எஸ்.ராகவன், மேனேஜர் M.S.பாஸ்கர், இளவரசு போன்ற கதாபாத்திரங்கள் செதுக்கப்பட்ட விதம் அழகு.
படம் தொடங்கும்போதும், முடியும்போதும் அவர்களை பற்றிய விளக்க குறிப்பு கொடுப்பது பிரமாதம். இரண்டாவது முறையாக பூலோகம் வரும் கடவுள் கேலக்ஸி பாக்ஸிற்கு போடும் பூட்டுகள் தியேட்டரில் அதிர்வேட்டுகளை ஏற்படுத்துகிறது.
வன்முறையில் அப்பாவி ஒருவரின் உயிர் பறிக்கப்படும் காட்சி. நீ கெட்டவன் என கடவுளை செருப்பால் அடிக்கும் சிறுமிக்கு கிடைக்கும பதில் என்ன என்பதை புரிந்துகொள்வது கடினமாகிறது.
நல்ல கான்செப்ட், நிறைவான கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என எல்லாம் இருந்தும் சகதியில் மாட்டிய சக்கரமாய் படம் நகர்வது அறை எண் 305-ஐ புழுக்கமாக்குகிறது.