வைரஸின் பெருக்கம் போலவே கமலின் புதிய முயற்சியும், அறிவின் தேடலும் பல அவதாரங்களை பிரசவித்துக் கொண்டே போகின்றன. அவற்றின் தற்போதைய வடிவமே தசாவதாரம்.
நீ என்ன பெரிய உலக நாயகனா? படத்தில் பி.வாசுவின் கேரக்டர் கேட்கும் கேள்விக்கு 'ஆமாம் அப்படியே வைத்துக்கொள்ளேன்' என்ற கமலின் பதிலில் ஒரு வீரனின் மார்தட்டலை அடையாளம் காணமுடிகிறது. பத்துஅவதாரங்கள் மட்டுமின்றி ஒற்றை ஆளாய் கமல் தூக்கி சுமந்திருக்கும் கதை, திரைக்கதை, வசனம் என்ற சுமைகளில் புத்திசாலித்தனமான தமிழ்சினிமாவிற்கான விதைகள் அடங்கியுள்ளன.
2004-ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்துடன் 12-ம் நூற்றாண்டு கதைக்கு பாலமிடும் திரைக்கதை நுணுக்கம் புதியது. அந்த காலத்திலேயே கடவுளை கும்பிடும் விஷயத்தில் வேறுபாடு கலந்திருந்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் மனிதனின் மூளைக்குள் தோன்றும் ஆக்க பூர்வமான, அறிவு பூர்வமான சிந்தனை வேறுபாடுகளை உள்ளீடாக வெளிப்படுத்தும் திறமையில் தத்துவார்த்த முகம்.
அமெரிக்காவில் அதி பயங்கர உயிர்க்கொல்லி கிருமிகளை கண்டுபிடிக்கும் ஆய்வகத்தில் விஞ்ஞானியாக இருக்கிறார் கமல். அந்த கண்டுபிடிப்பை நாச வேலைக்கு பயன்படுத்த திட்டம்போடுகிறார் தலைமை விஞ்ஞானி. இதனையறியும் கமல் கிருமிகள் அடங்கிய குப்பியை ஆய்வுகூடத்திலிருந்து வெளியே எடுத்துவருகிறார். கமலை துரத்துகிறது நாசகார கும்பல்.
இதற்கிடையே அந்த குப்பி இந்தியா வந்து சேர்கிறது. அதனை கைப்பற்ற முயலும் கமலை போலீஸ் ஒருபக்கமாகவும் தீவிரவாத கும்பல் மறுபக்கமாகவும் துரத்த, பயங்கர அழிவிலிருந்து மக்களை காப்பாற்ற கமல் எப்படியெல்லாம் போராடுகிறார் என்பது மீதி கதை.
ரங்கராஜன் நம்பி, விஞ்ஞானி, தீவிரவாதி பிளட்சர், உளவுத்துறை அதிகாரி பல்ராம்நாயுடு, குங்பூ மாஸ்டர், தலித் தலைவர் வின்சென்ட், கிருஷ்ணவேணி பாட்டி, உயர்ந்தமனிதன் கலிபுல்லா கான், பாடகர் அவதார்சிங், ஜார்ஜ் புஷ் என கமலின் தசாவதாரம் உலகில் எந்தவொரு நடிகரும் செய்யாத சாதனை.
இதில் தீவிரவாதி பிளட்சர், பல்ராம்நாயுடு, குங்பூமாஸ்டர், புஷ், வின்சென்ட் ஆகிய கேரக்டர்களில் தோற்றம் மட்டுமின்றி, பாடிலாங்வேஜ், உருவம், பின்னணி குரல் என கமல் காட்டியிருக்கும் வித்தியாசம், ஆச்சரியத்தின் உச்சம். குறிப்பாக பல்ராம்நாயுடு கேரக்டரில் தியேட்டரை சிவகாசியாக்கும் அளவில் காமெடியை வாரி வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
தன்னை துரத்திவரும் வி்ல்லனை கண்ணிமைக்கும் நேரத்தில் கைமா பண்ணிவிடுவதுதான் தமிழ் சினிமாவின் ஹீரோயிசம். ஆனால் அப்படியெல்லாம் காதுகுத்தாமல் ஒரு விஞ்ஞானியால் எந்த அளவில் போராட முடியுமோ அதைமட்டும் செய்திருப்பது சிறப்பு. என்ன ஒன்று! பலமாடி கட்டிடங்களிலிருந்து சின்ன சிராய்பு இல்லாமல் அநாயசமாக குதிக்கும் காட்சிகளிலெல்லாம் காது நிறைய பூவை செருகுகிறார் திரைக்கதையாசிரியர் கமல்.
ரங்கநாதர் சிலையை தகர்க்க குலோத்துங்க சோழனின் (நெப்போலியன்) வீரர்கள் முயல்வதும் அதனை தடுக்க கமல்ஹாசன் காட்டும் பலமும் பலே. ரங்கராஜன் நம்பியின் புஜபலத்தை நம்பும்படியான உடலமைப்பு பெற கமல் போன்ற மகா கலைஞனால் மட்டுமே சாத்தியமான ஒன்று. மன்னனின் ஆணைக்கு பயப்படாமல் 'ஓம் நமோ நாராயணா...' என ஓங்காரமிடும் காட்சியில் பிரமிக்கவைக்கிறார். உடம்பெல்லாம் அழகுகுத்தி அந்தரத்தில் தொங்கவிடும்போது பரிதாபம், சிலிர்ப்பு, தைரியம் மூன்றையும் உணரவைப்பது அவரது உழைப்பிற்கு சான்று.
அமெரிக்க வில்லனும், ஜப்பான் குங்பூ மாஸ்டரும் மோதிக்கொள்ளும் இடத்தில், ஹீரோசிமா நாகசாகி ஞாபகம் இருக்கிறதா? என முதலாமவர் கேட்கும் கேள்விக்கு, 'பேஃல் ஹார்பர்' ஞாபகம் இல்லையா என இரண்டாமவர் பதிலடி கொடுக்கிறார். வரலாற்றை அறிந்தவர்களிடமிருந்து இந்த காட்சிக்கு கிடைக்கும் கைதட்டல்களின் பெருமை வசனகர்த்தா கமலையை சேரும்.
மணல்கொள்ளை, ஆன்மீக, நாத்திக வாதங்கள், அதிபர் புஷ்ஷின் செயல்பாடுகள் என போகிறபோக்கில் இன்றை சமூகத்தை சாட்டையடி வசனங்களால் பிரதிபலிக்கும் கமலுக்கு கொடுக்க தேவைப்படும் பூங்கொத்துக்கள் நிறைய. வசனகர்த்தாவாக கமல் சொல்லும் விஷயங்களில் மூழ்கி திளைப்பவர்களுக்கு மட்டுமே அவை 'முத்து' என்பது புலம்படும்.
சுனாமியில் நல்லவன் சாவதும், கெட்டவன் பிழைப்பதுமான காட்சியிலும் நம் தலைதட்டி கற்பி்க்கும் பாடமும் அர்த்தமும் பல கிளைகளை பரப்புகிறது. கமலுக்கும் அசினுக்கும் இடையே நடக்கும் ஆன்மீக, அறிவியல் பூர்வமான தர்க்கங்களில் பொதிந்துள்ள அர்த்தங்களும் ஆயிரம். க்ளைமாக்ஸில் சுனாமி பேரலையில் புரட்டப்பட்டு வந்த 12-ம் நூற்றாண்டு பெருமாள் சிலையில் சாய்ந்தபடி கமல்-அசின் பேசும் இடத்தில் கிரேட் ஸ்கீரின் ப்ளே.
ஹெலிகாப்டர், கார் சேஸிங் போன்றவைகளும் ஆங்கில்ப படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. கமலின் பத்து கேரக்டர்களும், நுணுக்கமான விஷயங்கள் மீதும் கவனம் செல்வதால் மற்ற கேரக்டர்கள் இப்படத்தில் பெரிய பாதிப்பை எதுவும் ஏற்படுத்தவில்லை.
கிராபிக்சும், நிஜமும் பிரிக்கமுடியாத அளவில் எடிட்டரின் பணி சிறப்பானதாக இருக்கிறது. சமீர் சந்தா, தோட்டாதரணி, எம்.பிரபாகரன் ஆகியோரின் கலை அமைப்புகளும் பாராட்டுக்குரியது. சிகையலங்கார நிபுணர் மற்றும் மேக்கப் மேன்கள் கமலின் உழைப்பிற்கு தோள் கொடுத்துள்ளனர்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், ஹிமேஷ் ரேஷ்மியாவின் பாடல் இசையும் படத்தின் இன்னொரு பலம். பதினோறாவது அவதாரமாக செயல்பட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனையும் பாராட்டலாம். இது அத்தனைக்கும் உறுதுணையாக இருந்திருக்கும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ஒரு கை குலுக்கலை தரலாம். எனினும் அவரது அடையாளம் எந்த இடத்திலும் தென்படாதது ஏனோ?
தசாவதாரம் - 'ஆகாது சேதாரம்'.