துன்பங்களையே தொடர்ந்து சந்திக்கும் இன்பா என்ற இளைஞனின் கதை இது.
படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கும் ஷாமை சந்தர்ப்ப சூழ்நிலையால் மாணவபருவத்திலேயே ஜெயில் காற்றை சுவாசிக்கவைக்கிறது விதி. தண்டனை முடிந்து விடுதலையாகும் ஷாமிற்கு கண்ணுக்கெட்டாத தூரத்தில் தெரிகிறது எதிர்காலம்.
தன்னை நம்பியிருக்கும் தாய்-தங்கையை காப்பாற்ற. அருண்பாண்டியன் தங்கையான சினேகாவின் பாதுகாவலராக வேலை செய்கிறார். நாளடைவில் ஷாம் மீது காதல் கொள்கிறார் சினேகா. இந்த விஷயம் அருண்பாண்டியனுக்கு தெரியவர மறுபடியும் சனியுடன் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார் ஷாம். நாயகனின் போராட்டமும் நாயகியின் காதலும் ஜெயிப்பது கிளைமாக்ஸ்.
தாடி வைத்திருப்பதை தவிர ஷாமின் நடிப்பில் வேறு வித்தியாசம் தெரியாதது சோகமே. இப்படியே போனால் படத்தின் கதையை போலவே நிஜத்திலும் போராடவேண்டியிருக்கும் மிஸ்டர் ஷாம்.
கோடை மாதத்தில் கொட்டும் மழையைபோல ஆச்சர்யமளிக்கிறது சினேகாவின் கிளாமர் புரட்சி. கோயில் கலசமாய் கும்பிடுபோட வைத்தவர் இதில் கஜூராஹோ சிற்பமாய் அங்கம் காட்டி கிறங்கடிக்கிறார்.
சீரியஸாக பேசுகிறாரா சிரிப்பதற்காக காமெடி செய்கிறாரா என்னும் குழப்பத்தை ஏற்படுத்தும் அருண் பாண்டியனின் குரல் தியேட்டரில் அழுகுரலை ஏற்படுத்துகிறது.
இளவயது ஷாம் - சினேகா கேரக்டரில் நடித்திருக்கும் பையனும், பூர்ணிதாவும் நிறைவு. கஞ்சாகறுப்பு காமெடியெல்லாம் எடுபடவில்லை.
'நீ வாழ்க்கைக்கு துணை தேடிக்கிட்டிருக்க நான் வாழ்க்கையையே தேடிக்கிட்டிருக்கேன்' என்ற சுபாவின் வசனம் பளிச்.
இசை புதுமுகம் பாலாஜி. அடுத்தபடத்திலாவது ரசிக்கவைப்பாரா பார்ப்போம்.
கதை, திரைக்கதை, இயக்கம் வேந்தன். சரி இப்போ என்ன அதுக்கு என்கிறீர்களா?
'இன்பா' பாவம்.