கரும்பிலிருந்து சாறெடுப்பது ஒரிஜினல். சாற்றிலிருந்து சர்க்கரை எடுப்பது ரீ-மேக். அந்தவகையில் சீனிவாசன் பிழிந்து கொடுத்த சாற்றில் குசேலன் சர்க்கரையை தந்திருக்கிறார் பி.வாசு.
ஓட்டையான நாற்காலியை ஒட்டுப்போடக்கூட வசதியில்லாத ஏழை பார்பர் பசுபதி. மகளின் ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்கு வக்கில்லை என்றாலும் நேர்மையான வழிதவறி போகாதவர்.
இப்படி பஞ்சராகி்ப்போன வாழ்க்கையில் வண்டியை ஓட்டிச்செல்லும் பசுபதியின் பள்ளிக்கூட நண்பர் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அசோக்குமார் (ரஜினி). இந்நிலையில் படப்பிடிப்புக்காக பசுபதியின் ஊருக்கு வருகிறார் சூப்பர் ஸ்டார்.
சலூன் கடைக்கு சுழல் நாற்காலி வாங்குவதையே கனவாக நினைக்கும் பசுபதியின் நண்பன்தான் சூப்பர் ஸ்டார் என்றால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படிதான் பசுபதியை ஏளனம் செய்கிறது ஊர். பழைய நண்பனை பார்க்க முடியாமல் தாழ்வுமனப்பான்மையில் கூனிக்குறுகிப்போகும் பசுபதிக்கும் தலை நிமிர்ந்து நடக்கும் நேரம் வருவதே கதை.
நடிகன் என்ற சொந்த பாத்திரத்தையே பதிவு செய்ய வேண்டிய புதிய கேரக்டர் ரஜினிக்கு. இயல்பு வாழ்க்கையின் கோபம், பாசம், நகைச்சுவை என தன் சுயத்திற்கு முகமூடி போடாமல் வெளிப்படுத்தியிருப்பது ப்ளஸ்.
பள்ளி விழாவில் பழைய நண்பன் பற்றி பேசும்போது உருகும் இடமும் ரஜினிக்கு புது அனுபவமாகத்தான் இருந்திருக்கும். ஏனெனில் எம்.ஜி.ஆரை போலவே அழும் காட்சிகளில் காமிராவுக்கு முகத்தை காட்ட தயங்குவது ரஜினியின் பழக்கம். ஆனால் இதில் குளோசப் ஷாட்டில் கண்கலங்கி கலங்கடிக்கிறார்.
ரஜினியை பார்க்கவரும் இடத்தில் சுந்தர்ராஜன் கேட்கும் தலைகன கேள்விகளுக்கு ரஜினி சொல்லும் பதில் மீடியாக்களுக்கு சொல்வதாகவே உணரமுடிகிறது. கமல் பற்றிய கேள்விக்கு, 'நடிப்பில் அவர் நிறைய சாதனை செய்திருக்கிறார். அவர் பந்தா பண்ணுவதில் என்ன தவறு இருக்கிறது? என எதிர் கேள்வி எழுப்பி சக கலைஞனுக்கு வக்காலத்து வாங்கும் நல்ல மனசையும் பாராட்டலாம்.
வில்லன், காமெடியன், கதாநாயகன் என்ற எந்த போர்வையுமின்றி, நான் நடிகன் அவ்வளவுதான் என வெளிப்படையாக தன்னை அடையாளப்படுத்திவரும் பசுபதி இதிலும் அப்படித்தான். ஏழ்மையும், தாழ்வுமனப்பான்மையும் கொண்ட ஒரு பார்பராக வாழ்ந்திருக்கிறார்.
பிள்ளைகள் கூட தன்னை நம்ப மறுக்கும் சூழ்நிலையிலும் 'குழந்தைகள்தானே விடு...' என தன் வேதனைக்கு அலங்காரம் செய்யுமிடத்தில் கைகொடுத்து பாராட்டலாம் பசுபதிக்கு. தன் நட்பை மறக்காமல் ரஜினி மைக்கில் பேசுவதைக் கேட்டு, மரத்தூணில் ஒட்டியபடி உடைந்தழும்போது நமது அழுகையை கட்டுப்படுத்தும் முயற்சியில் தொண்டைக்குழியே புண்ணாகி வலிக்கிறது.
பார்பரின் காதல் மனைவியாக மீனா. 'எஜமான்' படத்தில் பார்த்ததைப்போல இளமை. மிகையில்லாத நடிப்பிலும் கவர்கிறார். நடிகையாகவே நயன்தாரா. படத்தின் நீளத்திற்காகவும் நீலத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஊரில் உள்ளவர்களையெல்லாம் மிரட்டி அழைத்து வந்து மொட்டையடித்து சம்பாதிக்கும் வடிவேலுவின் காமெடிகளில் லாஜிக் மொட்டையடிக்கப்படுகிறது. ரஜினியை நேரில் சந்தித்த சந்தோஷத்தில் கொடுக்கும் ரியாக்ஷ்னுக்கு சிரிக்க முடிகிறது. ரஜினியை சந்தித்து கால்ஷீட் வாங்கிவிட்டதாக லிவிங்ஸ்டன் கோஸ்டிகள் புரூடா விடும் காட்சிகளிலும் தியேட்டரே அதிர்கிறது.
சீனிவாசனின் ஒரிஜினல் கதைப்படி, "படத்தின் நாயகன் பசுபதிதான். மீதம் 25 சதவீதம் நான், 25 சதவீதம் வடிவேலு" என குசேலன் பற்றிய பேட்டிகளில் ரஜினி சொன்ன கணக்கு சரியாகத்தான் வந்திருக்கும். ஆனால், வியாபாரம் என்ற சூத்திரத்தில் பல திணிப்புகளை செய்திருப்பதால் குசேலன் தித்திப்பு திகட்டலாகிப்போகிறது.
உதாரணத்திற்கு சின்ன சின்ன கதாபாத்திரத்திற்குகூட பிரபலங்களை பயன்படுத்தியிருப்பதும், தேவையற்ற இடங்களில் செட் மற்றும் கிராபிக்ஸ் செலவுகளை செய்திருப்பதும் கதையின் ஜீவனுக்கு கருத்தடை செய்வதுபோல ஆகிவிட்டது.
ரஜினி தங்கும் விடுதியின் பின்னணியில் ஏகப்பட்ட மிக்ஸிங் தேவைதானா? பசுபதியின் வீடு, மீனா அமர்ந்திருக்கும் கிணறு, மார்க்கெட் போன்றவையெல்லாம் அசல் அல்ல, அட்டை என்பதை எளிதாக காட்டிக் கொடு்க்கி்றது.
ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையில் 'சொல்லம்மா சொல்லம்மா....'பாடல் மட்டும் தேறுகிறது. பின்னணியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.புல்லாங்குழல் வழியாக சோகத்தை பிரதிபலிப்பது பொருத்தம். பெரும்பாலும் பிரமாண்ட அரங்குகளும், கிராபிக்ஸ் ஒட்டலும் இருப்பதால் யதார்த்த முகம் இழந்து செயற்கை முலாம் பூசப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் பணி.
ஆங்காங்கே திரைக்கதையில் பி.வாசு சறுக்கியிருப்பது தெரிகிறது. எடுக்க வந்தது ஒரு படம்தான். ஆனால் ஷூட்டிங் நடப்பதோ இரண்டு மூன்று படங்களின் கதைபோல காட்டப்படுகிறது. ஷூட்டிங் என்றால் இவ்வளவு நீளமான காட்சிகளா எடுக்கப்படும்? இன்னும் சந்திரமுகி 'லகலகா... 'சத்தத்தை குறைக்காததும் எரிச்சல். இப்படியான குறைகளையெல்லாம் கடைசி 15 நிமிட காட்சிகள் மறக்க செய்வது வாசுவின் பலம்.