விமர்சனம் எழுத கதையோட்டத்தை நினைவுகொள்ளும்போதே விசைப்பலகையில் விழும் கண்ணீர்த்துளிகளே இது காவியம் என்பதற்கு சாட்சியளிக்கிறது.
கரிசல்காட்டு வெடிப்புபோல பகையில் பிரிந்து கிடக்கும் அண்ணன்-தம்பி குடும்பம். அண்ணன் விரும்மாண்டியின்(G.M.குமார்) வாரிசுகள் விரோத மனப்பான்மையுடன் வீராப்பு காட்டுகிறது, தம்பி மாயாண்டியின் (மணிவண்ணன்) வாரிசுகளோ எப்போதும் பாசத்தையே ஊட்டுகிறது.
உப்பு பெறாத காரியத்தையெல்லாம் ஊதி பெரிதாக்கி சண்டைக்கு நிற்கும் விரும்மாண்டி குடும்பத்தின் வஞ்சமும் வளர்ந்துகொண்டே போகும் நிலையில் திடீரென இறந்துபோகிறார் மாயாண்டி. இவரது வாரிசுகளில் முதல் மூன்று பையன்களும் திருமணம் ஆனவர்கள். கடைக்குட்டியான தருண்கோபி அப்பாவின் கனவை நிறைவேற்ற இன்ஜினியரிங் படிக்கிறார்.
அப்பா இறந்தபிறகு அண்ணிகள் குடும்பத்தை பிரிக்க, தனிமையும், வெறுமையும் தருண்கோபியை நடை பிணமாக்குகிறது. அவ்வப்போது ஆக்ஸிஜன் கொடுத்துக்கொண்டிருந்த காதலி பூங்கொடியும் ஒரு நாள் வேறொருவனின் மனைவியாக பார்க்க நேரிட, சருகாகிப்போகிறது தருண்கோபியின் மனது.
கடைசிவரை தனது மகன்கள் சந்தோஷமாக வாழவேண்டும் என ஆசைப்பட்ட மாயாண்டியின் கனவு நனவாகிறதா? இல்லையா? என்பதே கதை.
பெத்த மனசு என்பதைக் காட்டிலும் சுத்த மனசாக இருக்கும் மாயாண்டி பாத்திரம் மணிவண்ணனுக்கு. கதையின் பாதியிலேயே இறந்துவிட்டாலும் படம் பார்த்துவிட்டு வெளிவந்த பின்னும் உயிர்வாழும் ஒரு கதாபாத்திரம் அது.
மணிவண்ணனின் மகன்களாக பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண்கோபி நால்வருமே தங்களுக்கான சந்தர்ப்பங்களில் கரகோஷம் பெறுகின்றனர். இயல்பை மீறி செயற்கைத்தனம் தலைக்காட்டாததே இதற்கு காரணம். தனிக் குடித்தனத்திற்கு ஆசைப்பட்டு அடிக்கடி முறுக்கிக் கொள்ளும் அண்ணிகளும் படத்தின் வெற்றிக்கு ஏணிகள்.
ஒரு வேளை சோற்றுக்கே அவமானப்படுத்தப்பட்ட கொழுந்தனே ஒருமுறை தனது உயிரை காப்பாற்றிய பிறகு, பெரிய அண்ணியின் மனமாற்ற காட்சி மென் கவிதை.
அக்கா பிள்ளைகளின் காதுகுத்திற்காக செல்லும் தருண்கோபியை உதவாக்கரை என சொல்லி விரட்டியடிக்கிறார் அக்கா வீட்டுக்காரரான ராஜ்கபூர். ஆனால் 50,000 மொய் எழுதிவிட்டு சாப்பிடாமல்கூட திரும்பும் தம்பியை துரத்திக்கொண்டே வரும் தருண்கோபியின் அக்கா, "அடேய் தம்பி... நீ என் தம்பியில்லடா என்னோட அப்பன் மாதிரிடா..." என தார் ரோட்டில் விழுந்து கதறும் காட்சியில் அழாத மனம் ஜடம்.
விருமாண்டி குடும்பத்தின் மூன்று மகன்களும் எப்போதுமே விறைத்துக்கொண்டிருக்க, கொஞ்சம் லூசுத்தனமாக திரியும் சிங்கம்புலிதான் அடிக்கடி அப்பிக்கொள்ளும் சோகத்திற்கு காமெடி களிம்பு போடுகிறார்.
சித்தப்பா மகன்களுடன் அண்ணன்கள் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க ஒரு குச்சி ஐஸை மென்றபடி அவர் காட்டும் அலப்பறை தியேட்டரை தீபாவளியாக்குகிறது. 'குழந்தை எப்படி பிறக்கும்?' என்னும் அவரது கேள்விக்கு விடை சொல்லத்தெரியாமல் முழிக்கும் கட்டங்களுக்காகவே சிங்கம்புலிக்கு காமெடி பட்டம் தரலாம்.
கதையின் அடித்தளமே தருண்கோபி கேரக்டர்தான். அப்பா இறந்த பிறகு வாட்டும் தனிமை, விரட்டும் அவமானம், நிராகரிப்பு என சுக்குநூறாகும் மனதின் நிலையை கிட்டத்தட்ட 90 சதவீதம் சரியாகவே வெளிக்காட்டுகிறார். இன்னொரு பத்து சதவீதம் மெனக்கெட்டிருந்தால் இயல்பு வெளிப்பட்டிருக்கும். பூங்கொடியுடனான காதல் எபிசோடும் ரசனை.
தொழிலாளர் உரிமைக்கு கொடிப்பிடிக்கும் பொருத்தமான கேரக்டர் சீமானுக்கு. "பேசாம பேசாம இருந்து கோழி குஞ்சுகள தூக்குதடா பருந்து..." என ஒலிக்கும் சீமானின் சொந்தக்குரல் பாடல், நாடி நரம்புகளுக்குள் ஊடுருவுகிறது.
தம்பியின் தனிமை சமையலை அண்ணன்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது படம் பார்பபவர்களின் நாவிலும் அந்த மீன் குழம்பின் ருசி.
சபேஷ் முரளியின் இசையில் பாடல்கள் அத்தனையுமே அருமை. பழைய 'முத்துக்கு முத்தாக...' பாட்டு வரும்போதெல்லாம் கரைபுரளும் கண்ணீருக்கு அணைபோட முடியவில்லை. க்ளைமாக்ஸில் பெரியப்பா விருமாண்டியின் காலை தருண்கோபி கட்டிப்பிடித்துக்கொண்டு சமாதானத்திற்காக கதறும்போது G.M.குமார் விடும் கண்ணீர், மாயாண்டி குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல இயக்குனர் இராசு மதுரவனின் வெற்றியும்கூட.
'மாயாண்டி குடும்பத்தார்' Very Good Family