அர்த்த செறிவுள்ள, அச்சுப் பிழை இல்லாத கவிதைத் தொகுப்பை படித்து முடிக்கும் தருவாயில் ஏற்படும் பரமதிருப்பியுடன் ஒப்பிடத் தகுந்தது இந்த 'மொழி.'
ஏ,பி,சி என்ற தமிழ் சினிமாவின் வியாபார எல்லை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களின் மனங்களிலும் வியாபிக்கக்கூடிய வித்தயாச மொழி இது.
இசையமைப்பாளர்களான ப்ருத்விராஜ் - பிரகாஷ்ராஜ் இருவரும் பிரம்மச்சாரிகள். வாடகை வீடு பிடிப்பதற்கு குடும்பஸ்தன் என்னும் தகுதி தேவைப்பட பிருதிவிராஜை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி ஐடியா கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ்.
பார்த்தவுடனேயே மனசுக்குள் மணியடிப்பதுமாதிரி, மண்டையில் பல்பு எரிவது மாதிரியான பெண்கள் அகப்பட்டால் கல்யாணத்திற்கு ரெடி என்று தனது எதிர்ப்பார்ப்பை சொல்லும் ப்ருதிவியின் கண்ணில் ஒருநாள் ஜோதிகா எதிர்பட, மனசுக்குள் மணியடித்து மண்டையில் பல்பு எரிய ஆரம்பிக்கிறது.
சின்னதான அறிமுகத்துடன் ஜோவிடம் நெருங்கும்போதுதான் அவர் காது கோளாத ஊமை என்பது ப்ருதிவிக்கு தெரிகிறது. காதலுக்கு கண்ணே இல்லை என்னும்பொழுது பேச்சு முக்கியமாகிவிடுமா என்ன? இப்போதுதான் ப்ருதிவி - ஜோவின் சினேகம் நெருக்கமாகிறது. ஒரு கட்டத்தில் ஜோவை காதலிப்பதாக செல்கிறார் ப்ருதிவி.
பதிலுக்கு ஜோவின் முலம் பிரகாசமடைந்து வெட்கம் பூக்கும் என்று நினைத்தால் நடப்பதென்னவோ வேறு. காதலை சொன்ன ப்ருதிவின் நட்பே இனி வேண்டாமென்று ஜோதிகா இடைவெளிவிட்டு நகர, இடைவேளை வருகிறது. அடுத்து நிகழும் சம்பவங்கள் இரண்டாம் பாதி கதை.
லக லக லக... என சப்தம் போட்டால்தான் ஜோதிகாவுக்கு ரியாக்ஷ்ன் வரும் என்றில்லை. கண்களால், காற்றினுடே செய்யும் விரல் அசைவுகளாலும் தன் நடிப்பின் அற்புதத்தை அநாயசமாக உணர்த்தியிருக்கும் ஜோவின் திறமையே உரக்க கத்தி பாராட்ட தோன்றுகிறது.
நிசப்தம் மட்டுமே அறிந்த ஜோதிகா ஸ்பீக்கர் பாக்ஸில் கைகளை வைத்து இசையை உணரும்போது அவருக்குள் சப்தம் அறிமுகமாகும் நிகழ்ச்சிகளை கண்களால், முகத்தின் பரவசத்தால் வெளிப்படுத்தும் காட்சிகள் உலக திரைப்பட விழாவுக்குபோய் வந்த திருப்தியை ஏற்படுத்துகிறது.
டிஷ்யும் போடுவது டூயட் ஆடுவது மட்டுமே ஹீரோயிசம் இல்லை என்பதை நெற்றி பொட்டில் அறைந்து சொல்கிறது ப்ருதிவிராஜின் கேரக்டர். காதலியின் மௌன உலகம் எப்படியிருக்கும் என்பதை அறிய காதுக்கு கதவு போட்டபடி வெளியிடங்களில் உலா வரும் இடங்கள் ரசனை.
ஜோவின் தோழியாகவரும் சொர்ணமால்யாவிடம் பொசுக்கென்று 'உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்' என்று சொல்லும் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத கலகல காமெடியில் பிரகாஷ்ராஜிடம் புதிய பரிமாணம்.
குடியிருப்போர் சங்க தலைவராக வரும் பிரம்மானந்தம், மகனின் மரணத்தில் பழைய கால நினைவுகளிலேயே இருக்கும் M.S.பாஸ்கர் கதாபாத்திரங்களும் அழகாக கையாளப்பட்டுள்ளன.
வித்யாசாகரின் இசையில் நல்ல வார்த்தைகளையும் வைரமுத்துவின் வரிகளில் நல்ல ஓசையையும் உணர்த்தும் மொழிகளாக பாடல்கள் இதம் சேர்க்கிறது. 'காற்றின் மொழி...', 'மௌனமே உன்னிடம்'பாடல்கள் இதற்கு உதாரணம். ஒளிப்பதிவாளர் குகனும் ஒளியால் மொழி பேசியிருக்கிறார். மிடில்கிளாஸ் வீட்டின் உட்புறத்தை இத்தனை அழகாக காட்டிய படம் இதுவாகதான் இருக்கும்.
"அவளுக்கு வாழ்க்கை தருவதற்காக இல்லை
அவளுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதற்காக..."
"மனசுக்குள்ள கூட உன்னால எப்படி ஊமையா நடிக்க முடியது...?" போன்ற வணங்களில் வசனகர்த்தா விஜியின் பேனா கதாப்பாத்திங்களின் விரல் பிடித்து நடந்திருக்கிறது.
குத்துப்பாட்டை வைத்துக் கொண்டு குடும்பத்துடன் காணவேண்டிய சித்திரம் என அண்ட புளுகு விடும் கலப் 'படங்களுக்கு' மத்தியில் நிஜமாகவே குடும்பத்துடன் உட்கார்ந்து ரசிக்கக்கூடிய பாடத்தை தந்திருக்கும் ராதாமோகனை இயக்குனர் பாசிலின் இடத்தில் வைத்து பாராட்டலாம்.
'மொழி' பேசவைக்கிறது.