திசைமாறிப் போனவர்களின் திசைமாறிய கதை. ஆக்ஷ்ன் கால், காமெடி கால், காதல் கால், கவர்ச்சி கால் என மசாலா படத்தின் கணக்கை முழுசாக்கியிருக்கின்றனர்.
ஊரு உண்டியலை திருடிவிட்டு ஓடுற பஸ்ல ஏறி சென்னை வந்து சேர்ந்த பக்கா திருடன் நிதின்ச்தயா. டேனியல் பாலாஜியின் ரேஞ்சே தனி. இவரு பாஸ்போர்ட் திருடன். திருடுறதுல ஸ்டேட்டஸ்ட் வேறவேறன்னாலும் இரண்டு பேரோட டேஸ்டும் திருட்டுங்கறதால ஒண்ணு சேர்றாங்க.
இந்த டிராக் தனியா போய்கிட்டிருக்க, முதலமைச்சரான சரவணன் கொலை வழக்கில் குற்றவாளியை மோப்பம் பிடிக்கும் போலீஸ் டிராக் தனி. சந்தர்ப்ப சூழ்நிலையில் போலீஸின் மோப்பம் டேனியல்-நிதின் மேல் பரவுகிறது. முதல்வர் கொலையின் முக்கியமான எவிடென்ஸ் இருக்கும் லேப்டாப் இப்போ திருடர்களான ஹீரோக்களின் கையில். அதற்கு பிறகு நடக்கும் லப்டப் ஸாரி லேப்டாப் நிமிடங்களே மீதி கதை.
வில்லனா நடித்துக்கொண்டிருந்த டேனியலுக்கு இதில் நல்லவன் புரமோஷன். ஹைடெக் திருட்டு-ஹார்ட் பீட்டை எகிறவைக்கும் லவ் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்.
டேனியல் கொஞ்சம் அடக்கி வாசி்ப்பவர் என்றால் அதற்கு நேரெதிர் கேரக்டர் நிதின் சத்யாவுக்கு. சதா பேசிக்கொண்டே பிளேடு போடுகிறார். கேரக்டருக்கு மட்டுமின்றி காமெடிக்கும் ஒத்துழைக்கிறது அவரது திருட்டு முழி. இருந்தும் தன்னை சிபிஐ ஆபீசரென்று சொல்லும் நிதினை நம்பி காதலிக்கும் மஞ்சரி ஆஃப் மெண்டலுக்கு நிகர்.
அழகை வைத்து சம்பாதிக்க ஆசைப்படாத பார் டான்சராக லஷ்மிராய். ஆசையையும், ஏக்கத்தையும் மனசுக்குள் பூட்டிவைத்து கண்களால் அதனை வெளிப்படுத்தும் காட்சிகளில் கவர்கிறார். அந்த பார் டான்ஸ் நடனம்கூட சூப்பர்ங்க!
முதல்வர் கொலையில் குற்றவாளி யாரென்ற சஸ்பென்ஸ் ஆரம்பத்திலேயே புரிந்து கொள்ள முடிவதால் அந்த ஏரியா வரும்போதெல்லாம் புஸ்.... இடைவேளைக்கு பிந்தைய துரத்தல் காட்சிகள் ஓ.கே. தோட்டாதரணியின் கலையும், சலீமின் ஒளிப்பதிவும் கவனிக்கவைக்கின்றன.
இன்னும் மெனக்கெட்டிருந்தால் 'முத்திரை' பதித்திருக்கலாம்.