சாப்பாட்டு விஷயத்தில் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சம்பந்தம் பேசபோகும் இடங்களில் இப்படி நடந்தால் ஒரு ஆணின் மனநிலை எப்படியிருக்கும் இந்த ஒற்றை கேள்வியை உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெகன்நாத்.
ஊருக்கெல்லாம் திருமண அழைப்பிதழ் விற்கும் சேரனுக்கு திருமணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. மியூசிக்கல் சேரில் இடம் கிடைக்காமல் ஏமாறும் நபர்களைபோல ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நிராகரிப்புகளால் சேரனின் மனம் ரணமாகிறது.
கடைசியாக பெண் பார்க்கப் போகுமிடத்தில் ஏற்கனவே தன்னை நிராகரித்த பெண்களை சந்திக்கும் சூழ்நிலை சேரனுக்கு. சூழ்நிலையின் முடிவில் சேரனின் கல்யாண கனவு நனவாகிறதா? இல்லையா என்ற கேள்விக்கு கிடைக்கிறது விடை.
சந்திக்கும் பெண்களையெல்லாம் சல்லாபம் கொள்ளும் ஹீரோக்கள் பற்றிய கண்றாவி கமர்ஷியல் கதைகளுக்கு மத்தியில், தன்னை ஏமாற்றும் பெண்களுக்கு வெவ்வேறு சூழ்நிலையில் உதவிக்கரம் நீட்டும் ஒரு நாயகனின் கதையை கொச்சையான காட்சிகளின்றி படம்பிடித்த இயக்குனர் ஜெகன்நாத், மனதில் இடம் பிடிக்கிறார்.
ஹீரோயிசம் காட்டுகிறேன் பேர்வழி என கதையின் போக்கிலிருந்து விலகி மூக்கை நீட்டாத இயல்பான நடிப்பில் படத்தின் எதார்த்தத்திற்கு பலம் சேர்க்கும் சேரனும் பலே. உணர்ச்சி பிழம்பாகும் தருணங்களில் வார்த்தைகள் சிக்கிமுக்கி கல்லாக அவர் காட்டும் பாவங்கள் படம் பார்ப்பவர்களின் மனசை பாரமாக்குகின்றன.
விடிந்தால் ரம்யா நம்பீஸனுடன் கல்யாணம். ஆனால் மணமகளோ காதலனுடன் ஓடிவிடுகிறார். பிரிதொரு கட்டத்தில் ரம்யாவை ஏழை கர்ப்பிணியாக சந்திக்கிறார் சேரன். அவரது குடிசை வீட்டுக்கு சென்று விடைபெறும் நேரத்தில் திரும்பி 'பார்க்கும்' அந்த ஒரு பார்வை 'சோகக்கவிதை'.
தன்னம்பிக்கை நிறைந்த வானொலி தொகுப்பாளராக வரும் பசுபதியின் கதாபாத்திரம் எத்தனைமுறை வேண்டுமானாலும் 'பார்க்கலாம்'. 'வணக்கம் நான் நெடுமாறன் பேசுகிறேன்' என்னும் அந்த கம்பீர குரலில் கஜாலாவைப் போலவே நாமும் கவர்ந்திழுக்கப்படுகிறோம். இந்த கதாபாத்திரத்திற்காக பசுபதி நிறைவான பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருப்பதும் அவரது உடல்மொழி காட்டிக்கொடுக்கிறது.
கொஞ்சம் சினிமாத்தனமான எபிசோட் என்றாலும் நிதின் சத்யா டிராக்கும் ரசனையானவைதான். கார்த்திகாவின் மனசை திருடும் களவானி கேரக்டரில் சரியாக பொருந்தியுள்ளார். ஓட்டப்பந்தயத்தில் வென்றதற்காக காவல்துறைக்கு நன்றி சொல்லும் இடத்தில் தியேட்டர் முழுவதும் சிரிப்பொலி.
எப்போதோ வேண்டாமென்று சொன்ன சேரனுடன் மீண்டும் சேர்ந்துவாழும் சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கும் விமலாராமன், மனதில் பதிகிறார். தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை என்பது தெரியாமல் லத்தி சார்ஜில் சேரனையும் நைய புடைக்கும் நவ்யா நாயருக்கு கெஸ்ட் ரோல். இருந்தாலும் அதனை பெஸ்ட் ரோலாக்கிக் காட்டியிருக்கிறார்.
பாடல், பின்னணி இசை இரண்டிலுமே வித்யாசாகர் சிறப்பு சேர்த்திருக்கிறார். உறுத்தாத ஒளிப்பதிவுக்காக ராஜேஷ்யாதவுக்கும் ஒரு சபாஷ்.
ஐந்து கதாநாயகிகள் இருந்தும் கமர்ஷியல் என்ற போர்வையில் மிஸ் யூஸ் பண்ணாத ஜெகன்நாத்தின் நேர்மைக்கும் தொய்வில்லாத திரைக்கதைக்கும், இயக்கத்திற்கும் பாராட்டுகள்.
'ராமன் தேடிய சீதை' - பவித்திரம்