
Written by: JBR
'அந்நியன்' படம் முன் வைக்கும் சமூக சீரழிவும், அதற்கான தீர்வும் எத்தனை தூரம் நியாயமானவை என்பதை குறிப்பிட்ட தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றின் வழியாக நாம் எளிதாக புரிந்து கொள்ளமுடியும். அந்த விளம்பரம் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்டு, சிறு வியாபாரிகளின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது. அந்த விளம்பரத்தில் வரும் காட்சி இதுதான்.
ஒரு பெட்டிக்கடைக்கு இரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்களுக்கு குடிக்க கோலிசோடா தருகிறார் கடைக்காரர். அந்நேரம் கடைக்கு வரும் விக்ரம், கோலிசோடாவைக் குடிக்கவேண்டாம் என தடுக்கிறார். பிறகு ஒரு துடைப்பத்தால் கடைக்காரரின் மஞ்சள் பற்களை சுத்தம் செய்கிறார். கோலிசோடாவும் கேலி செய்யப்படுகிறது. பிறகு அசடு வழிய கடைக்குள்ளிருந்து கோக் போத்தல்களை எடுக்கிறார் கடைக்காரர். விக்ரமின் முகம் பிரகாசமடைகிறது. குடிக்க தகுந்தது கோக் மட்டுமே என்கிறார் விக்ரம்.
சில நொடிகளே நீடிக்கும் இந்த விளம்பரம் கூறும் செய்தி, உள்ளூர் சிறு வியாபாரிகளின் தயாரிப்பான கோலிசோடா தரமற்றது. பிற்போக்கானது. அதை விற்பனை செய்பவர் சுகாதாரமில்லாதவர். சரியாக பல்கூட விளக்கத்தெரியாதவர். நாம் குடிக்க வேண்டியது கோக். நவநாகரீக உலகத்தின் அடையாளம், சுகாதாரத்தின் இருப்பிடம் கோக்.... கோக் மட்டுமே!
தன்னை உயர்த்திப்பிடிக்க அடுத்தவர்களை ஒழுக்கமில்லாதவர்களாக, சுகாதாரமில்லாதவர்களாக சித்தரிப்பது பார்ப்பனீயத்தின் ஒரு கூறு. தீண்டாமை என்ற பெயரில் காலங்காலமாக இதனையே பார்ப்பனீயம் செய்து வருகிறது.
கோக்கும் பீட்ஸாவும் பிராண்டட் உடைகளுமே மனிதனை முழுமையாக்குகிறது என்ற கருத்தை உலகத்தின் மூளையில் வலிந்து திணித்து வரும் அமெரிக்காவின் உலகமயமாக்கல் கொள்கையும் பார்ப்பனீயத்தின் குரலையே எதிரொலிக்கிறது.
கோக் விளம்பரத்தில் பிரதிபலிக்கும் இந்த பார்ப்பனீய மற்றும் அமெரிக்க உலகமயமாக்கல் மனோபாவத்தின் வழியாகவே அந்நியனிலும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் அணுகப்பட்டிருக்கிறது.
அந்நியன் கொலைசெய்யும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒழுக்கமில்லாதவர்களாக, சோம்பேறியாக, குடிகாரர்களாக, கடமையை செய்ய தவறியவர்களாக இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக தண்டனை அளிக்கும் அம்பியும் அவனை சுற்றியிருக்கும் அக்ரஹாரவாசிகளும் ஒழுக்கமானவர்களாக, நியாயவான்களாக, அநியாயத்துக்கு அஞ்சுகிறவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அய்யங்கார் கதாநாயகியும், சபா செகரெட்டரியும் செய்யும் தவறுகள் கூட வேறு வழியில்லாமல் செய்யப்படுபவை, எந்த தனிமனிதனையும் உடல்ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ காயப்படுத்தாதவை. இவர்கள் இருவரும் அந்நியனின் கொலை தண்டனைக்கு இலக்காகவில்லை என்பதும் முக்கியமானது.
இதிலிருந்து பார்ப்பனீய மனோபாவமும், அமெரிக்க உலகமயமாக்கல் மனோபாவமும் இணைந்த 'கோக் மனோபாவம்' வழியாகவே அந்நியன் கதை புனையப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.
இந்த மனோபாவம் எத்தனை மோசடியான ஒன்று என்பதை அந்நியனில் வரும் காட்சியை வைத்தே விளக்கமுடியும். முதலில், புகைவண்டியில் உணவு விநியோகிக்கும் கான்ட்ராக்டர் சொக்கலிங்கத்தை எண்ணையில் பொரித்து எடுத்த கதையை பார்ப்போம்.
சொக்கலிங்கம் செய்த தவறு தரம் குறைந்த உணவை விநியோகித்தது. நுகர்வோருக்கு உண்மையாக இல்லாமல் இருப்பது குற்றம். இதனால் அவர்களின் ஆரோக்கியமும் பணமும் சுரண்டப்படுகிறது. ஆகவே, சொக்கலிங்கம் குற்றவாளியாகிறார். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதே நேரம் இந்த குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால் சில நுட்பமான விஷயங்கள் தெரியவரும். ஒருவர் புகைவண்டியில் விற்கப்படும் தரம் குறைந்த உணவை தவிர்க்கும் பட்சத்தில் இந்த குற்றம் விளைவிக்கும் தீமைகளான ஆரோக்கிய மற்றும் பொருளாதார இழப்புகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இனி, தரத்திற்கும் சுகாதாரத்திற்கும் இலக்கணமாக சொல்லப்படும் கோக், பெப்ஸி வகையறாக்களுக்கு வருவோம். இந்த அமெரிக்க நிறுவனங்களுக்காக இந்தியாவின் நீர் ஆதாரங்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றன. கோக்கின் ஒரு பகுதியான கின்லே தண்ணீர் பாட்டிலுக்காக பவானி ஆற்றுப்படுகையிலிருந்து மட்டும் தினம் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. ஒரு வருடம் முழுவதும் இப்படி உறிஞ்சுவதற்கு இந்நிறுவனம் அரசுக்கு விட்டெறியும் தொகை வெறும் நான்கு லட்சம் மட்டுமே.
தொடர்ந்து சுரண்டப்படும் நீர் ஆதாரங்களால் அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியா எதிர் கொள்ளப்போகும் பிரச்சனைகள் அபாயகரமானவை என்று சமூகவியலாளர்களும் சுற்றுச்சூழல் வல்லுனர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த அமெரிக்க நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள நிலத்தடிநீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் இந்நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்துகிறவர்களை மட்டுமன்றி பயன்படுத்தாதவர்களையும், கோலாக்கள் என்றால் என்ன என்றே அறிந்திராத மலைவாழ் மக்களையும், இனி பிறக்கப்போகும் குழந்தைகளையும் கூட பாதிக்கக்கூடியது. இந்தப் பின்னணியில் இந்நிறுவனங்கள் நமக்கு ஏற்படுத்தும் பொருளாதார, சுகாதார இழப்புகள் கணக்கிடமுடியாதவை. ஒப்பீட்டளவில் கோலிசோடாக்களும் சொக்கலிங்கங்களும் இதற்குமுன் சின்ன கொசுவாகக்கூட எஞ்சமாட்டார்கள்.
இப்போது அந்நியன் கேட்கும் கேள்வியை அந்நியனை உருவாக்கிய ஷங்கர், விக்ரம், சுஜாதாவிடம் கேட்கலாம்.
"அஞ்சு கோடி பேர் அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுறது தப்பா?"
அல்லது,
"அஞ்சு பேர் அஞ்சு கோடி பேரிடம் அஞ்சு கோடி தடவை அஞ்சு கோடிரூபாய் திருடுறது தப்பா?"
இப்படி ஒப்பிட்டு பேசுவது சிறிய தவறுகள் செய்யத்தகுந்தவை என்று நியாயப்படுத்துவதற்கு அல்ல. ஐந்து பைசா தவறுகளை பிரதானப்படுத்துவதன் வழியாக ஐயாயிரம் கோடி பெறுமானமுள்ள குற்றங்கள் மறைக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டத்தான். இப்படி கோலிசோடாக்களின், சொக்கலிங்கங்களின் சில்லரை தவறுகளுக்கு பூதகரமான வடிவம் கொடுப்பதன் மூலம் கோடிகளில் கொள்ளையடிப்பவர்களை பாதுகாக்கவேண்டிய தேவை ஷங்கருக்கும், சுஜாதாவுக்கும், விக்ரமுக்கும் இருக்கிறது. ஏனெனில், இவர்கள்தான் கோக் போன்ற சுரண்டல் நிறுவனங்களின் மாடல்களாகவும், கெளரவ ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள்.
அந்நியனில் உரத்துப் பேசப்படும் இன்னொரு விஷயம் உழைப்பு. நம் 'கோக் மனோயியல்பு' கொண்டவர்களுக்கு (சுருக்கமாக அந்நியன்களுக்கு) உழைப்பு, முன்னேற்றம் என்றதும் மனக்கண்ணில் விரியும் இரண்டு நாடுகள் அமெரிக்கா, ஜப்பான்.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசும் போது மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.
* பிறநாடுகளை ஆக்ரமித்து அவற்றின் கனிமவளங்களை கொள்ளையடிப்பதன் வழியாகவும், போர் தொடுப்பது மூலமாகவும் அமெரிக்கா தன் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கிறது (உதாரணம், ஆப்கான், ஈராக் போர்களுக்குப் பிறகு அமெரிக்க ஆயுத கம்பெனிகளின் மொத்த வருவாய் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.)
* சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் அமெரிக்க தொழிற்சாலைகளை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நிறுவி அவற்றின் இயற்கை ஆதாரங்களை அழிப்பது (உதாரணம், அமெரிக்க கார்பைடு கம்பெனி போபாலில் நிகழ்த்திய விஷவாயு கொலைகள்)
* அமெரிக்க நிறுவனங்களின் வியாபார பலத்தை மூலதனமாக்கி, பிறநாட்டு உள்ளூர் தயாரிப்புகளை நசுக்குவது. (உதாரணம் கோக், பெப்ஸி)
இம்மூன்றும், அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் தவிர்க்க முடியாத அம்சங்கள்.
இந்தியாவை அமெரிக்காவைப்போல் முன்னேற்ற வேண்டுமென்றால், முதலில் அமெரிக்க நிறுவனங்கள் நம்மை சுரண்டுவதை நிறுத்த வேண்டும். அடுத்து ஈராக், ஆப்கானில் அமெரிக்கா செய்துவரும் வேலையை பிறநாடுகள் மீது இந்தியாவும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, அமெரிக்கர்களுக்கு வேலை செய்வதற்கென்றே பிள்ளைகளை பெற்று, அவர்களுக்கு பயிற்சியளித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியர்களைப் போன்ற ஓர் இனத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இத்தனையும் தாண்டித்தான் இருக்கிறது அந்நியன்கள் சொல்லும் அமெரிக்கக் கனவு. (ஒரு நகைச்சுவைக்காக யோசித்துப் பாருங்கள். உலகமே அமெரிக்காவாக மாறவேண்டுமென்றால், நாம் சுரண்டுவதற்கு இந்த பூமியைப் போல குறைந்தது ஐம்பது பூமிகளாவது நமக்கு தேவைப்படும்.)
ஜப்பானை எடுத்துக் கொண்டால், அங்குள்ள மானுடவியலாளர்களின் முக்கிய பிரச்சனை பெருகிவரும் தற்கொலைகள். உழைப்பினால் இயந்திரத்தனமாகிப் போன வாழ்க்கை தரும் சலிப்பிலிருந்து தங்களை ஒளித்துக் கொள்ள ஜப்பானியர்களுக்கு இருக்கும் ஒரே வழி தற்கொலை. இந்த உண்மையை கண்டறிந்த ஜப்பானியர்கள் இன்று அதற்கு மாற்று வழியை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
"இரண்டாம் உலகப்போரில் சின்னாபின்னமாக்கப்பட்ட ஒரு தேசம் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைய உழைப்பே காரணம்!" என்ற அந்நியனின் ஆச்சரியக்குறியை அப்படியே திருப்பி, "இரண்டாம் உலகப்போரில் சின்னாபின்னமாக்கப்பட்ட ஒரு தேசம் தனது வளர்ச்சிக்காக இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை தற்கொலைகளை நிகழ்த்தியிருக்கிறது என்றால், இன்னும் சில நூற்றாண்டுகள் இதே நிலை (உழைப்பு) நீடித்தால் பாதி தேசத்தையும் காவு கொடுக்க வேண்டிவருமே?" என்று கேள்விக்குறியாக்கமுடியும்.
அமெரிக்காவின் பாப் ப்ளாக் (Bob Black) தனது 'The Abolition of Work' நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"அமெரிக்காவில் கருநுரையீரல் நோய்க்கு ஒரு லட்சம் சுரங்கத் தொழிலாளர்களில் நான்காயிரம் பேர் ஆண்டுதோறும் இறக்கிறார்கள். சீரழிந்து போன நபர்களை மட்டுமே பாதிக்கும் என்று சொல்லப்படும் எய்ட்ஸால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம்."
ஜப்பான் மற்றும் பாப் ப்ளாக் தரும் விவரங்களிலிருந்து நாம் ஒரு கருத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது, சோம்பேறியாக இருப்பவர்களை கொலைசெய்யவே அந்நியன்கள் தேவைப்படுகிறார்கள். உழைப்பவர்களை அவர்களின் உழைப்பே கொலைசெய்து விடுகிறது!
அந்நியனில் ஷங்கரும் சுஜாதாவும் உழைப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் நேரடித்தொடர்பு இருப்பது போன்ற மாயையை வலிந்து கட்டுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்து எவ்வளவு பூஞ்சையானது என்பது இந்தியாவின் ஒவ்வொரு தொழிலாளிக்கும், விவசாயிக்கும் தெரியும்.
உதாரணமாக, 5 ஏக்கர் நிலத்தில் அல்லும் பகலும் பாடுபடும் விவசாயியின் ஆண்டு வருமானத்தை விட விவசாயத்திற்கு பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையின் வாட்ச்மேனின் ஆண்டு வருமானம் அதிகம். பொருளைவிட, பொருளை சந்தைப்படுத்துகிறவனுக்கு உள்ள மதிப்பு, அமெரிக்காவின் உலகமயமாக்கல் அளித்த கொடை.
இப்படி முன்னேற்றமும் வசதிகளும் உழைப்பவனுக்கு எதிர்திசையில் சென்று கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் உழைப்பை தூக்கிப் பிடிப்பதும் ஒரு மோசடியே!
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல், அந்நியனில் சொல்லப்படும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வும் (மரண தண்டனை) அதிகாரத்திலிருப்பவர்களின் மேலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கும் அமெரிக்கத்தன்மையையே பிரதிபலிக்கிறது.
நமக்கும் அமெரிக்காவுக்குமான அடிப்படை வித்தியாசம் நமது பாரம்பரியம். இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தை தங்கள் முதுகில் சுமந்தபடியேதான் இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறது. அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அந்நாடு உருவாகியே முந்நூறு ஆண்டுகள் தான் ஆகிறது. ஒரு அமெரிக்கனைப் போல் பிரச்சனை அதற்கான தீர்வு என நேர்கோட்டில் சிந்திக்கவோ, செயல்படவோ நமது பாரம்பரியம் அனுமதிப்பதில்லை. நமது பலவீனமும் தனித்துவமும் இதுதான்.
அமெரிக்காவில் இருபது வயதுக்குமேல் ஒருவன் தனது பெற்றோரை சார்ந்திருப்பது அபூர்வம். ஆனால் நம் கதை வேறு. உதாரணத்தை அந்நியனிலிருந்தே எடுத்துக் கொள்வோம்.
சோம்பேறியாக எந்நேரமும் குடித்தபடி பூங்காவில் படுத்துறங்கும் ஒருவனை கொலை செய்கிறான் அந்நியன். இந்த சோம்பேறி குடிப்பதற்காக பெற்றோரிடமிருந்து பணத்தை பிடுங்கிக் கொள்பவன். இவனது அன்றாட வாழ்க்கையை வீடியோவில் மக்களுக்கு போட்டுக் காட்டும் அந்நியன் அங்கு கூடியிருப்பவர்களைப் பார்த்து கேட்கிறான்.
'இப்படிப்பட்ட சோம்பேறிகளை என்ன செய்ய வேண்டும்?'
கூட்டத்திலிருந்து பதில் வருகிறது. 'கொலை செய்யவேண்டும்'. 'அதைத்தான் செய்தேன்' என்கிறான் அந்நியன் அமைதியாக.
உண்மையில் இந்த சோம்பேறியால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அவனது பெற்றோர்கள்தான். ஷங்கரும் சுஜாதாவும் இந்த காட்சியை படம்பிடிப்பதற்கு முன் ஒன்று செய்திருக்க வேண்டும். படத்தில் வருவது போன்ற ஒரு சோம்பேறி குடிகாரனை தேடிக்கண்டுபிடித்திருக்கவேண்டும். பிறகு, அவன் பெற்றோரிடம் அவனது குடியை, சோம்பேறித்தனத்தை எடுத்துக்கூறி இவனை கொலை செய்யலாமா என்று கேட்டிருந்தால், அவர்கள் அதற்கான பதிலை மட்டுமன்றி, அந்நியனின் அபத்தங்களையும் அவர்களது பாஷையில் புரியவைத்திருப்பார்கள். இப்போதும் தாமதமாகிவிடவில்லை. ஷங்கரும், சுஜாதாவும் ஒருமுறை இதனை முயன்று பார்க்கலாம்.
|
Feedback!
|
|