
Written by: Amalan
நல்லவேளை அப்போதே பரலோகம் சேர்ந்துவிட்டார் தாமஸ் ஆல்வா எடிசன். இன்று இருந்திருந்தால் இந்திய சினிமாவின் சென்சார் குழப்பங்களை கண்டு பைத்தியக்காரராக மாறியிருப்பார்.
அவ்வளவு குழப்பங்கள் இன்றைய சினிமா சென்சார் போர்டில் கூடி கும்மியடிக்கிறது.
ஏறத்தாழ 15,000 திரையரங்குகளை கொண்ட பாரததேசத்தில் தினமும் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் இரண்டரை கோடி.
பெற்றெடுப்பது பிள்ளை சுமந்தவள் என்றாலும் பிரசவம் பார்ப்பது என்னவோ மருத்துவச்சிதானே. அதே நிலைதான் சினிமாவில். தயாரிப்பாளரும் - இயக்குனரும் ஒரு படத்தை படைத்தாலும் அதை எப்படி வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதை கையில் கத்திரியுடன் முடிவு செய்வது சென்சார் போர்ட்தான்.
ஆரம்ப காலத்தில் 'சென்ட்ரல் போர்டு ஆஃப் பிலிம் சென்சார்' என்று இருந்த தணிக்கை அமைப்பை 'சென்ட்ரல் போர்டு ஆஃப் பிலிம் சர்ட்டிபிகேஷன்' என்று மாற்றியவர் எல்.கே. அத்வானி. மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் செய்தி - தகவல் ஒளிபரப்பு மந்திரியாக இருந்தபோதுதான் அத்வானி சென்சார் போர்டின் பெயரை இவ்வாறு மாற்றிவைத்தார்.
தமிழ்சினிமா உலகை பொறுத்தவரை ஆரம்பகாலத்தில் சென்சார் அதிகாரத்தை வைத்திருந்தது சென்னை நகரப்போலீஸ் கமிஷனர்தான். பின்னாளில் இதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டது.
இத்தணிக்கை குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சினிமா நுட்பமும் சமூகம் பற்றிய புரிதலும் இருக்கவேண்டும். ஆனால், இன்றைய நிலை அப்படி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால் விடை சொல்ல வெகுநேரம் யோசிக்க வேண்டியுள்ளது.
சென்சாரில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் சமூக செல்வாக்கின் காரணமாக உள்ளே மூக்கை நுழைத்தவர்கள். இவர்கள் நினைத்தால், ஒன்றை ஆபாசம் என்றும் ஒன்றை ஆபாசம் இல்லையென்றும் முடிவு செய்து விடுகின்றனர். இவர்களின் சென்சார் திறமைக்கு இன்றைக்கு வெளியாகும் திரைப்படங்களே சான்று என்று கிண்டலாக கூறுகின்றனர் சிலர்.
சென்சாரின் வேலை என்பது ஆபாச காட்சிகளுக்கு கத்திரி போடுவது என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் அதன் உள்ளே சென்று பார்த்தால் சென்சாரின் வரையறைகள் பட்டியல் போடுமளவிற்கு பெரிது.
U, A, U/A, S என தணிக்கை சான்றிதழ் நான்கு வகை உண்டு. U - அனைவரும் பார்க்கலாம். A - வயது வந்தவர்களுக்கு மட்டும். U/A - 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் பெற்றோருடன் செல்ல அனுமதி. S - டாக்டர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர்களுக்கு.
சென்சார் 'கைட் லைன்ஸ்' என்னும் விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால் ஒரு படம் சான்றிதழ் பெற்று வெளிவரும்.
தேசவிரோதமாக செய்யப்படும் வேலை, மக்களின் ஒரு பிரிவினரின் அல்லது குழந்தைகளின் மனதை புண்படுத்தும் விதமான காட்சிகள், வன்முறை, படுகொலை, ஆபாசக்காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் அல்லது வசனங்கள், குழந்தைகள் - உடல் ஊனமுற்றவர்களை பாதிக்கும் காட்சிகள் வசனங்கள் ஆகியவற்றை நீக்கவேண்டும் என்று கூறுகிறது சென்சார் விதிமுறை.
ஆனால், இந்த அம்சங்கள் இல்லாமல் சினிமா வெளிவருகிறதா என்று கண்ணை மூடி யோசித்து பார்த்தால் சென்சார் போர்டு தூங்குவது புலபப்படுகிறது.
சாதாரண சினிமா ரசிகனுக்கும் தெரிவதுபோல அவ்வப்போது சில படங்களுக்கு கடுமையான முட்டுக்கட்டை போட்டு சென்சார் அமைப்பு திடீர் பரபரப்பாக பேசப்படும் பின்னணியும் வேறுவிதமாகதான் இருக்கிறது.
ஆபாச படமாக இருக்கிறது என்று கொடிபிடிக்கும் மகளிர் அமைப்புகளும், ஜாதியின் பெயரை டைட்டிலில் வைத்ததாக நெஞ்சை நிமிர்த்தும் கட்சிகளும், தொழிலை கேவலப்படுத்துவதாக கூறி வழக்குபோடும் சங்கங்களுமே சென்சார் திடீர் பரபரப்புக்கு உள்ளாவதின் அடிப்படை காரணம்.
இதனிடையே சென்சாருக்கும் போராட்டம் நடத்தும் அமைப்புகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு மூச்சு திணறுவது என்னவோ பிரச்சனைக்குள்ளாகும் சினிமாவை எடுப்பவர்கள்தான்.
தணிக்கையில் வெட்டப்பட்ட காட்சிகளை சேர்த்து வெளியிட்டால் மூன்றுவருட சிறைதண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து என்பது சென்சாரின் சட்டம்.
தணிக்கை செய்யவேண்டிய ஆனால் தணிக்கை செய்யப்படாத காட்சிகளை திரையிட சென்சார் அனுமதிப்பது ஏனோ? உதாரணத்திற்கு 'பாய்ஸில்' வரும் உரசல் காட்சிகள் - வசனங்கள், 'காதல் செய்ய விரும்பு' படத்தில் வரும் 'யூஸ் பண்ணுடா என்னை யூஸ் பண்ணுடா' பாடல் காட்சி, 'குஷி'யில் 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடல் காட்சி, சமீபத்தில் வெளியான 'பம்பரக்கண்ணாலே' படத்தில் நமிதாவுக்கு கில்லி விளையாட கற்றுத்தரும் காட்சிகள் போன்றவற்றை சொல்லலாம்.
ஒரு படத்திற்கு எந்த சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்பது எப்படி முடிவாகிறது என்பதை பார்ப்போம்.....
படத்தை திரையிட்டு காட்டுவதற்கு 24 மணி நேர கால அவகாசத்திற்குள்தான் சென்சார் உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பவேண்டும். விதிகளின்படி நான்கு உறுப்பினர்களை குறிப்பிட்ட தியேட்டருக்கு வரும்படி தனித்தனியே தகவல் அனுப்பப்படும். தியேட்டருக்கு வரும்வரை மற்ற உறுப்பினர்கள் யார் யார் என்று அவர்களுக்கே தெரியாது.
படம் தொடங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்புவரை திரையிடப்போவது என்ன படம் என்பதுகூட அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் படம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பாக யார் படம், நடிகர்கள் யார் யார் போன்ற குறிப்புகளுடன் சென்சார் விதிமுறைகள் அடங்கிய கைட் லைன்கள் தரப்படும்.
எந்தெந்த காட்சிகளை கட் செய்யவேண்டும் என்பதை குறித்துக்கொள்ள கட்ஷீட்டும் தரப்படும். சென்சார் செய்யவேண்டிய காட்சிகள், வசனங்கள் எது என்பதை படம் ஓடும்போதே குறித்துக்கொள்வார்கள். படம் பார்க்கும்போதுகூட தணிக்கை குழுவினர் தனித்தனியாக பிரிந்துதான் அமரவேண்டும்.
படம் முடிந்ததும் என்ன சான்றிதழ் தரலாம் என்ற உறுப்பினர்களின் பொதுவான கருத்து அடிப்படையில் சான்றிதழ் குறியீட்டை குறித்துக்கொள்ள வேண்டும். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி விவாதிப்பார்கள். சர்ச்சை ஏதும் இல்லாமல் இருந்தால் தயாரிப்பாளர்களை அழைத்து சான்றிதழ் வழங்கிவிடுவார்கள்.
சர்ச்சை இருந்தால் தயாரிப்பாளர் - இயக்குனரை அழைத்து இருவரும் கருத்து பறிமாறிக்கொள்வார்கள். படத்திற்கு தேவையானது என்றும் தவறான கோணத்தில் எடுக்கப்படவில்லை என்றும் சில சமயங்களில் விவாதிப்பது உண்டு.
அப்படிப்பட்ட காட்சிகளை உறுப்பினர்கள் தீவிரமாக மறுபரிசீலனை செய்து எல்லா உறுப்பினர்களின் ஒப்புதல் பேரில் மட்டுமே காட்சிகள் அனுமதிக்கப்படும். இதில் ஒருவர் மறுத்தால்கூட சான்றிதழ் அனுமதிக்கப்படாது.
இப்படி தணிக்கை குழுவின் செயல்பாடும் விதிமுறைகளும் இரும்பு பிடியாய் இருக்கும்போது ஆபாசம் என்ற துரு பிடித்த காட்சிகள் இடம்பெறும் படங்கள் வெளிவருவது எப்படி என்பது சென்சார் போர்டுக்கே வெளிச்சம்.
'அக்ரஹாரத்தில் ஒரு கழுதை' 1973-ம் ஆண்டில் வெளிவந்த இந்தப்படத்தை ஜான் ஆபிரஹாம் இயக்கியிருந்தார். இன்றும்கூட அந்தப்படம் சினிமாக்காரர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் சென்சாரும் அரசாங்கமும் இந்தப்படத்திற்காக குழம்பிக்கொண்டதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
இப்படத்திற்கு சென்சார் கிடைத்து பின்னர் தேசிய விருதும் கிடைத்தது. ஆனால், தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் என்றால் ஒரு படத்தை திரையிட சென்சார் அனுமதி கொடுத்தபின்னரும் அரசை விமர்சிக்கும் விதத்தில் இருக்கும் படங்கள் மறு சுற்றுக்கு வருவது மிகக்குறைவு. அந்த விதத்தில் பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான 'தண்ணீர் தண்ணீர்', ஸ்ரீதர்ராஜன் இயக்கிய 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' போன்ற படங்கள் மறு சுற்றுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்க சென்சாரின் குழப்பமாகும்.
காட்சிகளும், வசனங்களும் இப்படியென்றால் படத்தின் பாடல்களின் நிலை வேறுவிதம். ஒரு படம் சென்சார் ஆவதற்கு முன்பே அந்த படத்தின் பாடல் கேசட்டுகள் வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்து விடுகின்றன. ஆபாசமும் இரட்டை அர்த்த வரிகளும் ஆடை சூடிய பாடல் படம் வெளிவருவதற்கு முன்பே பிரபலமடைந்துவிடுகிறது. சில நேரங்களில் அந்த பாடல்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டால்கூட ஏற்கனவே ஒலிநாடா மூலம் வெளியான நஞ்சு வார்த்தைகள் பிஞ்சு மனசுகளில்கூட முற்றிவிடுகிறது.
இதைவிட காமெடி ஒன்றும் சென்சார் வசம் இருக்கிறது.
'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா' என்ற பழைய பாடலை 'எந்த பார்வையின் கேள்விக்கு' என்றும் இன்னொருபாடலில் 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாவை போல்...' என்ற பாடல் வரியை ஒலிநாடாவில் அனுமதித்துவிட்டு படத்தில் 'திருவிகவை போல்' என்றும் சென்சாரால் மாற்றப்பட்டிருக்கும்.
இப்படி தேவையில்லாத வரிகளை நீக்கிய அதே தணிக்கை குழு, 'எப்படி எப்படி சமஞ்சது எப்படி....', 'நேத்து ராத்திரியம்மா....', 'நிலாக்காயுதே....', 'ஆத்தா ஆத்தோரமா வாரீயா....' போன்ற 'கருத்தாழமிக்க' வரிகளுக்கு சுதந்திரம் கொடுத்தது ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள் விஷயவாதிகள்.
மாவட்ட நீதிமன்றம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்பது போல சென்சாரிலும் பல அடுக்குகள் இருக்கிறது. தணிக்கை குழு கூறிய வெட்டுகளுக்கு தயாரிப்பாளர் சம்மதிக்காவிட்டால் சென்னையிலுள்ள மறுபரிசீலனை கமிட்டிக்கு படம் பார்க்க ஏற்பாடு செய்யலாம். அவர்களும் ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில் டில்லி டிரிபூனல் குழுவிற்கு படத்தை அனுப்பலாம்.
அப்படியானால் தணிக்கை குழுவின் முடிவு முட்டாள்தனமானதா? முட்டாள்தனமான முடிவு என்று டிரிபூனல் முடிவு செய்யுமாயின் முட்டாள்தனமான தணிக்கை குழுவிற்கு அதிகாரம் கொடுத்தவர்கள் முட்டாள்தனம் செய்துவிட்டார்களா? என அடுக்கடுக்காக கேள்விகள் மூளையில் முளைவிடுகிறது.
ஏற்கனவே இருக்கும் இந்த முரண்பாடுகள் போதாதென்று அவசியமற்றதாக கருதப்படும் சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு தடை என்ற சட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகமொத்தம் சினிமா காட்சிகளையும் சென்சாரின் செயல்பாடுகளையும் ஆராய ஆரம்பித்தால் மனநல மருத்துவரை அணுகவேண்டிய அளவிற்கு குழப்பம் மட்டும் மிஞ்சிநிற்கிறது.
|
Feedback!
|
|