Home |  Cine Chance |  Gallery |  News |  Reviews & Previews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
  -07.10.2005
   Home  | Interviews  | Gallery Click here for Kushboo pics!




  



Kushboo கோயில் கட்டியவர்களைகூட தனக்கெதிராக குதற வைத்துவிட்டது கற்பு குறித்த குஷ்புவின் கருத்து. 'வெள்ளையனே வெளியேறு.....' முழக்கத்தை காட்டிலும் குஷ்புவை நாடு கடத்துவதற்கான குரல்கள் சப்தமாக எழும்பியது.

குஷ்பு கூறியது தவறு தவறு.. என்னும் ஒலிகளுக்கிடையே குஷ்புவுக்கு ஆதரவான குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் மூலமாக இருந்த 'இந்தியா டுடே' பத்திரிகை இது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையை அப்படியே தருகிறோம்.

செக்ஸ் பற்றிய குஷ்புவின் கருத்துக்கள் சமூக-பண்பாட்டுத் தளங்களைத்தாண்டி, அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இது சகிப்புத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

தமிழ்நாட்டு மருமகளாக அறியப்பட்ட நடிகை குஷ்புவை இப்போது தமிழ்நாட்டுப் பெண்களைக் கொச்சைப்படுத்திய ஒருவராக அடையாளங்காட்டும்படியான போராட்டங்கள் பல தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகின்றன. செப்டம்பர் 28, 2005 இந்தியா டுடே இதழில் செக்ஸூம் இளம் பெண்களும் என்பது பற்றி, இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட அறிவியல் பூர்வமான சர்வேயின் அடிப்படையிலான கட்டுரை வெளியாகியது. அந்த சர்வேயின் அடிப்படையில் கிடைத்த புள்ளி விபரங்கள் குறித்த கருத்தாக குஷ்பு சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றிய முற்போக்கான கருத்துக்கள் சிலவற்றை பொதுவானதளத்தில் வைத்துக்கொண்டிருந்தார் குஷ்பு. ஆனால் அந்தக் கருத்துக்கள் "தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாக" ஒரு தரப்பினர் கருதுகிறார்கள்.

Kushboo பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கும் இந்த அமைப்புகள், குஷ்புவைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதே அமைப்புகளின் சார்பாக குஷ்புவுக்கு எதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டு வருகின்றன. "திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளும் போக்கு பெருகிவருகிறது என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாத பெண்கள் எத்தனைபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று காட்டுங்கள் பார்க்கலாம் என்று குஷ்பு நாளிதழ் ஒன்றில் சவால் விட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த பெண்களின் கற்பையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறார். அதனால்தான் 500, 504, 509 பிரிவுகளின் கீழ் குஷ்பு மீது அவதூறு வழக்குகள் தொடர்ந்திருக்கிறோம்" என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவுத்தலைவரான கே.பாலு. போராட்டங்கள், வழக்குகள் என்பதைத்தாண்டி தமிழகத்தை விட்டே விரட்டவேண்டும் என்பது போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இது போன்ற கோஷங்கள் ஆபத்தானவை என்று கூறும் பல சிந்தனையாளர்கள் குஷ்புவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். அவர்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து குஷ்புவைத் துரத்தவேண்டும் என்பது போன்ற கோஷங்களை கருத்து சுதந்திரத்திற்கு எதிரான போராகப் பார்க்கிறார்கள். ஆனால் வலதுசாரி அமைப்புகள் இதை வேறு மாதிரியாகப் பார்கின்றன. "கருத்துச் சுதந்திரம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடமுடியாது. சில செய்திகள் மக்களின் மனதைப் பலவீனப்படுத்தும். அது போன்ற கருத்துக்கள் தவிர்க்கப்படவேண்டும்" என்கிறார் பா.ஜ.க.வின் தேசியச் செயலர் இல.கணேசன். கருத்துச் சுதந்திரம் பறிபோகிறதா என்ற கேள்வியைத் தாண்டி இப்போது குஷ்புவின் கருத்தை வரவேற்கிற குரல்களும் பெண்ணுரிமைவாதிகள் மற்றும் சிந்தனையாளர்கள் மத்தியிலிருந்து எழ ஆரம்பித்திருக்கின்றன. கண்ணகி சிலை அகற்றப்பட்ட பிரச்சனை எழுந்தபோது " 'கற்பு' என்பதே இந்துத்துவ கருத்து என்று சொன்ன திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பிடமிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியது எதிர்பாராத விஷயம்" என்று இந்தியா டுடேயிடம் கூறினார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி. "இந்தப் போராட்டம் தேவையற்றது. மேலும் குஷ்புவை மும்பைக்கு ஓடச்சொல்வது ஜனநாயக விரோதக் கொள்கை" என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தலைவி உ.வாசுகி.

Kushboo குஷ்பு மீது வழக்குப் போடத்தூண்டிய அரசியல் தலைவர்களின் மீதே வழக்குப் போடப் போவதாகச் சொல்கிறார் மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான ரஜினி. "குஷ்பு தமிழ்ப் பெண்களைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லாத போது அவருடைய கருத்துக்களைத் திரித்துச் சொன்ன அரசியல்தலைவர்கள் மீது வழக்குப் போடுவதாக ஒத்தக்கருத்துள்ள பெண் வழக்கறிஞர்களை அணிதிரட்டியிருக்கிறேன் " என்கிறார் ரஜினி.

பெண்ணுரிமைவாதிகள், குஷ்புவின் கருத்தை ஆதரிக்கிற சூழலில் சிந்தனையாளர்கள் இந்தப் போராட்டங்களை அரசியலாக்கப்படுவதாக கருதுகிறார்கள். "குஷ்பு இந்தியாடுடேவுக்குத் தெரிவித்துள்ள ஒவ்வொரு வரியிலும் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஒரு தேர்ந்த சமூகவியலாளரைப் போல அவர் கருத்துக் கூறியிருக்கிறார். மாறிவரும் சமூகப் போக்கினை குஷ்பு புரிந்து கொண்ட அளவுக்கு கூட நமது அரசியல்தலைவர்கள் கொள்ளவில்லை என்பது அபத்தமாக இருக்கிறது." என்கிறார் குஷ்புவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டிருக்கும் பேராசிரியர் அ. மார்க்ஸ். "திருமணமான பெண்கள் கணவரைத்தவிர பிற ஆண்களுடன் உறவுவைத்துக் கொள்வது தவறாகாது என்று 1970ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் போட்ட பெரியார் பிறந்த மண்ணில் சிவசேனைக் கலாச்சாரம் உருவாவது கண்டிக்கத்தக்கது. ஆண்கள் இரண்டு ஆசைநாயகிகளை வைத்தால் நீங்களும் நான்கு ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன பெரியார் வாழந்த மண்ணில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் பால்தாக்ரேயின் இடத்தைப் பிடிக்க போட்டா போட்டி போடுவது வேதனைக்குரியது." என்கிறார் அவர். Kushboo

இதற்கிடையில் தலித் அமைப்புக்கள் சிலவும் குஷ்புவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவரும் திருமாவளவனின் போக்கை கண்டித்துள்ளன. "திருமாவளவன் மீடியாவில் இடம் பிடிக்கும் மலிவான விளம்பர ஆசையில் தலித் பிரச்சனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு விஜயகாந்த், குஷ்பு பிரச்சனைகளில் எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது" என்கிறார் தலித் மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளரும் வழக்கறிஞருமான மு.சு. திருநாவுக்கரசு. இந்தப் பிரச்சனையில் குஷ்புவை இப்போது தனிமைப்படுத்தி வழக்குகளின் மூலம் சித்ரவதை செய்யும் போக்கை சிந்தனையாளர்கள் கண்டிக்கின்றனர். "தொடர்ந்து அவதூறு வழக்குகளைப் போடுவதன்மூலம் குஷ்புவுக்கு மன உளைச்சலைக் கொடுக்கிறார்கள்" என்கிறார் பெண்ணுரிமை கருத்துக்களை வெளியிட்டதற்காக குஷ்புவை வாழ்த்தி சென்னை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கும் பெரியாரியவாதியான நடராஜ். "நடிகைகளைக் கேவலமாகப் பேசியபோது தங்கர்பச்சானிடம் மன்னிப்புக் கோரியபோதே குஷ்புவின் பெண் ஆதரவுநிலை தெரிந்தது. இப்போது இந்தியாடுடேயின் மூலம் தனது பெண்ணுரிமை நிலைப்பாட்டை குஷ்பு தெளிவுபடுத்தியுள்ளார்" என்கிறார் நடராஜ். விடுதலைச்சிறுத்தைகள் இந்த விவகாரத்தில் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்திருக்கிறார் தலித் கவிஞரான தய். கந்தசாமி. "குஷ்பு சொன்னது முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான். பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசியது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான். பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசியதை ஏன் எதிர்க்க வேண்டும்?" என கேள்வி எழுப்புகிறார் அவர்.

Kushboo சமூக பண்பாட்டு தளத்தில் குஷ்புவுக்கு ஆதரவான மற்றும் எதிரான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிற சூழலில், இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவது குறித்த விவாதங்களும் தொடர ஆரம்பித்திருக்கின்றன. குஷ்பு விவகாரத்தின் பின்னணியில் செயல்படும் அரசியலைப் பற்றி ஆராயவேண்டும் என்கிறார் நடிகர் சாருஹாசன். குஷ்புவுக்கு ஆதரவான கருத்துக்கள் அடங்கிய மின்னஞ்சல் ஒன்றைத் தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்பி குஷ்புவுக்கு ஆதரவு கோருகிறார் சாருஹாசன். ஒரு கருத்தை வெளியிடுவதற்கு சாதமான சூழலே இல்லாத அளவிற்கு சகிப்புத்தன்மையற்ற சூழல் உருவானதைப் பலரும் கண்டிக்கின்றனர். "இந்தச் சகிப்புத்தன்மையற்ற சூழலை ஒரு சில இயக்கங்கள் மட்டும் உருவாக்கவில்லை, சகிப்புத்தன்மையற்ற சூழல், சமூகத்தின் குரலாகவே இருக்கிறது. உடைக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவுதரும் பெரும்பான்மை மனோபாவமே கண்டிக்கத்தக்கது." என்கிறார் அரசியல் விமர்சகரான ரவிக்குமார்.

இந்தப் பெரும்பான்மை மனோபாவத்தை அரசியலாக்கும் முயற்சியாகத்தான் குஷ்பு விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டன என்கிறார் அவர். "பா.ம.க. முதலான ஜாதிக்கட்சிகள் தங்களது குறுகலான வரையறையிலிருந்து வெளிவர நினைக்கின்றன. அதனால்தான் பெரும்பான்மை கருத்தியல் ஆதரவைப் பெற இது போன்ற பிரச்சனைகளை கையிலெடுக்கிறார்கள். அந்த வகையில் குஷ்பு விவகாரத்தை இப்போது ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் ரவிக்குமார்.

Kushboo குஷ்புவின் தனிப்பட்ட கருத்து இப்போது அரசியலாக்கப்பட்டிருப்பதை வெளிப்படையாகவே உணர முடிகிறது. பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய போராட்டங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து தி.மு.க. ஆதரவு சன் டி.வி. செய்திகளை வெளியிடுகிறது. சன் டி.வி. குழுமத்தைச் சேர்ந்த தமிழ் முரசு மாலை நாளிதழும் அதிகப்படியான முக்கியத்துவத்தை இந்தப் போராட்டங்களுக்கு அளிக்கிறது. அ.தி.மு.க. ஆதரவு ஜெயா டி.வி. இந்தப் போராட்டங்களுக்கு பதிலடி தரும்படியாக செய்திகளை வெளியிடுகிறது. ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட பெண்களிடம் எடுக்கப்பட்ட பேட்டி என்றுசொல்லி ஜெயா டி.வி. ஒரு செய்தித்தொகுப்பை ஒளிபரப்பியது. அந்த செய்தித் தொகுப்பில், 'ஏதோ கூப்பிட்டாங்க; கோஷம் போடச்சொன்னாங்க. அதான் வந்தேன்' என்று குஷ்புவுக்கு எதிராக போராட்டத்திற்கு வந்த பெண் ஒருவர் பேட்டியளிக்கிறார். குஷ்பு எந்தப் பத்திரிகையில் பேட்டியளித்தார் என்கிற கேள்விக்கு 'டுட்டோரியல்' என ஒரு பெண் பதிலளிக்கிறார். இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்பி 'இது செட்டப் செய்த கூட்டம்' என்று பதிலடி தருகிறது ஜெயா டி.வி. அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் இதில் சம்பந்தப்பட்ட சன் டி.வி. குழுமத்தை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டது.

இவை தவிர, குஷ்பு விவகாரம் அரசியலாக்கப்படுகிறது என்பதற்காகச் சொல்லப்படும் காரணங்களும் இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்குகின்றன. நடிகைகள் விபச்சாரிகள் என்று இயக்குனர் தங்கர்பச்சான் விமர்சித்த விவகாரத்தில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டதன் பின்னணியில் முக்கியமாக செயல்பட்டவர் குஷ்பு. தங்கர்பச்சான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் வெளிப்படையான ஆதரவாளர். அதனால்தான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் குஷ்பு விவகாரத்தை வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்குகிறது என்று சொல்லப்படுகிறது. திருமாவளவனும்கூட குஷ்பு விவகாரத்தை வைத்துக்கொண்டு வெளிப்படையாகவே தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்தை சீண்டுகிறார். "நடிகர் சங்கம் குஷ்புமீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், அவருடைய பதவியை ராஜினாமா செய்யவேண்டும்" என்கிறார் தொல். திருமாவளவன். தங்கர்பச்சானுக்கு ஒரு நீதி, குஷ்புவுக்கு ஒரு நீதியா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அவர்.

Kushboo ஆனால், நடிகர் சங்கம் குஷ்புவின் கருத்து அவருடைய சொந்த கருத்து: அதில் நடிகர் சங்கம் தலையிடாது என்று அறிவித்திருக்கிறது. இப்படி பலமுனைத் தாக்குதல்களோடு குஷ்பு விவகாரம் அரசியலாக்கப்பட்டு இருக்கிறது. "ஆண்களைத் தலைவர்களாகக் கொண்ட அரசியல் அமைப்புகள் தங்களது சொந்த ஆதாயத்திற்காக குஷ்பு என்கிற பெண்ணுக்கு எதிராக பெண்களையே தூண்டிவிடுகிறார்கள்" என்கிறார் வழக்கறிஞர் ரஜினி. இங்கு அடிப்படை விஷங்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை என்கிறார் எழுத்தாளரும் கட்டுரையாளருமான வாஸந்தி. "இந்த படிமங்களுக்குப் பின்னால் இருப்பது ஒரு பூதம். அரசியல் என்னும் பூதம். அடுத்த மாநில அவைத் தேர்தல் எனும் பகாசுர பூதம், அருகில் நெருங்கும் சமயத்தில் யாதவர்களுக்குப் கோரைப்புல்லெல்லாம் வாளாக மாறிப்போனது போல, கள்ளமில்லாமல் உதிர்க்கும் ஒரு சொல்கூட துப்பாக்கி ரவையாகிப் போகிறது" என்கிறார் அவர்.

போராட்டம் நடத்தும் கட்சிகள் மக்கள் விரோத, சமூக விரோத இயக்கங்கள் என்கிறார் உயிர்மை பத்திரிகையின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன். "மக்களின் கடுமையான பிரச்சனைகள் எதற்கும் முகம் கொடுக்கத் திராணியற்ற நிலையில் ஊடகங்களுக்குத் தீனி போட்டு, தம்மை நிலை நிறுத்திக்கொள்ள பாலியல்சார்ந்த பிரச்சனைகளை இந்தக் கட்சிகள் முன்னெடுக்கின்றன. பிற்போக்குத்தனமான நிலமானிய மதிப்பீடுகளை தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் முன்னிறுத்துவதும் கலாச்சார பாசிசத்தின் வெளிப்படையான உதாரணம்" என்கிறார் அவர்.

Kushboo "சர்வேயின் முடிவுகளின்படி கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து அது. அதை இந்த அளவு பிரச்சனையாக்கியிருக்கத் தேவையில்லை" என்கிறார் ரவிக்குமார். பலரும் இதே கருத்தை கூறுகிறார்கள். ஆனாலும் குஷ்புவின் எதிர்ப்பாளர்கள் இந்தப் பிரச்சனையைக் கைவிடுவதாக இல்லை. அரசியல்மயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சனையை, வெளிப்படையான விவாதங்களால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியும். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவான சமூகம், குஷ்புவின் எதிர்பாளர்களுக்கு ஆதரவான சமூகம் இந்த இரண்டிற்கும் இடையிலான பிரச்சனையாக இப்போது உருவெடுத்திருக்கிறது. ஆக, இதை குஷ்பு என்கிற தனி நபருக்கு எதிரான பிரச்சனை என்று மட்டும் சுருக்கிப் புரிந்துக்கொள்ள முடியாது. ஒரே சமூகத்திற்குள் இருக்கும் இரண்டு பிரிவினர்களுக்கிடையிலான முரண்பாடு இது. ஆரோக்கியமான, வெளிப்படையான விவாதங்கள் மூலம்தான் இந்த முரண்பாட்டை குறைக்க முடியும். மிரட்டல்கள் வன்முறைகளால் அல்ல.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   
 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hot Pictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us