இந்த வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜுன் முப்பதுவரை 50 படங்கள் ரிலீஸாகியுள்ளன. எண்ணிக்கையில் பார்க்கும்போது இது சென்ற வருடத்தைவிட (42) எட்டு படங்கள் அதிகம். வெற்றி பெற்ற படங்களின் விகிதமும் அதிகம் என்பது சந்தோஷமான விஷயம்.
இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் விஜய்யின் 'போக்கிரி.' தெலுங்கு ரீ-மேக்கான இதன் தாளம் போட வைக்கும் பாடல்கள், அசினின் நடிப்பு, விஜய்யின் அட்ராக்ஷ்ன், அதிரடி சண்டைகள், கொஞ்சமாக காமெடி, கிளைமாக்ஸில் சின்னதாக திருப்பம் என கமர்ஷியல் பேக்கேஜில் அனைத்து தரப்பையும் கொள்ளை கொண்டது. ஏறக்குறை 12 கோடியில் தயாரான படம் ஒட்டுமொத்தமாக 35 கோடிகள் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
'போக்கிரி'யுடன் வெளியாகி அனைத்து தரப்பினரின் கல்லாவை நிறைத்த படம் 'தாமிரபரணி.' ஹரியின் கதையும், விஷாலின் ஆக்ஷ்னும், பிரபு, நதியாவின் குணச்சித்திர நடிப்பும் படத்துக்கு ப்ளஸ்ஸாக அமைந்தன.
இந்த ஆறுமாதகாலத்தில் வழக்கமான சினிமா ஹீரோயிசத்துடன் வந்து ஜெயித்த படங்கள் இவை இரண்டு மட்டுமே! வெற்றி பெற்ற பிற படங்களான 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'பருத்திவீரன்', 'மொழி', 'சென்னை 600028', 'உன்னாலே உன்னாலே', 'நான் அவன் இல்லை' ஆகியன ஹீரோயிஸத்திலிருந்து பலவகைகளில் மாறுபட்டவை.
மனைவியை தவிர்த்து வேறோருவன் மனைவியிடம் சபலம் கொள்ளும் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' சரத்தின் கேரக்டர் தமிழ் சினிமாவில் அபூர்வம். ஜோதிகாவின் கேரக்டரும் அப்படியே. கதையும், அதை சொன்ன விதமும் தமிழுக்கு புதுசு.
'பருத்தி வீரன்' யதார்த்தம் என்பதை தனது பலமாக கொண்டு களம் இறங்கிய படம். ஆனாலும், ரவுடி ஒருவனை பார்வையாளர்கள் நேசிக்கும் விதமான திரைக்கதையும், காட்சிகளும், சண்டைகளும், பாடல்களும் இப்படத்தை வழக்கமான பார்முலா படங்களுடனே ஒப்பிட வைக்கும்படி செய்கிறது.
'மொழி' இசைக்கலைஞனின் காதலை பற்றியது. அவனது காதலி இசையை கேட்க முடியாதவள். அப்படி கேட்க முடியாததை ஒரு குறையாக கருதாதவள். காது கேட்க முடியாதவர்களை ஊனமுற்றவர்களாக கருதி, அவர்கள்மீது சிம்பதி பொழிந்து சிறுமைப்படுத்தும் இச்சமூகத்தின் மீது கோபம் உள்ளவள். ஆழமான விஷயத்தை நகைச்சுவை கலந்து சொன்ன இயக்குனர் ராதாமோகன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்.
பழைய படங்களை ரீ-மேக் செய்யும் கலாச்சாரத்தை தமிழில் தொடங்கி வைத்த படம் 'நான் அவன் இல்லை.' ஐந்து ஹீரோயின்கள், அவர்களை ஏமாற்றும் ஹீரோ, கிளு கிளு பாடல்கள் என பி,சி சென்டர்களை கலகலப்பூட்டிய படம்.
சென்ற வருடம் 'கொக்கி' மூலம் ஹீரோவான கரண் தனது பொஸிஷனை தக்க வைத்துக் கொண்ட படம் 'கருப்பசாமி குத்தகைதாரர்.' சத்யராஜை தயாரிப்பாளராக்கிய 'லீ' அவர் மகனை பரபரப்பான ஹீரோவாக்க தவறியது. நடுவில் ஒன்பது வயது சிறுவன் 'சாதனை' படம் இயக்கி கின்னஸில் (மட்டும்) இடம் பிடித்ததும் நடந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு எதிர்பாராத அளவுக்கு தோல்வி கண்டது சேரனின் 'மாயக்கண்ணாடி.' ஒரு சப்ஜெக்டை குறைந்தபட்ச அறிவு இல்லாமல் தொடக்கூடாது என்பதற்கும் அறிவுரை சொல்வதே நல்ல படத்துக்கு அழகு என தவறாக நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கும் கிடைத்த மரண அடி, 'மாயக்கண்ணாடி' மற்றும் 'நினைத்து நினைத்து பார்த்தேன்.'
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு படம் 'பெரியார்.' ஞானராஜசேகரன் 'பாரதி'யில் நிகழ்த்தி காட்டிய மேஜிக் இதில் மிஸ்ஸிங். உலக தலைவர்களையெல்லாம் ஒரே படத்தில் காட்ட முயன்றதும், நடிகர்கள் தேர்வில் இந்த குறைபாடும் 'பெரியார்' படத்தின் வில்லன்கள்.
பன்னெடுங்காலமாக பெட்டிக்குள் இருந்த ஆர்.கே. செல்வமணியின் 'குற்றப்பத்திரிகை' ஒருவழியாக இந்த வருடம் ரிலீஸானது. பெட்டிக்குள்ளேயே இருந்திருந்தால் செல்வமணி மீதிருந்த மரியாதை மிஞ்சியிருக்கும். கன்னடத்திலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட 'குப்பி', 'குற்றப்பத்திரிகைக்கு' சரியான மாற்று.
ஜுன் 15 வெளியான 'சிவாஜி' குறித்து கடந்த இரண்டு வருட காலமாக அளவுக்கதிகமாக பேசிவிட்டதால் அடுத்த விஷயத்துக்கு வருவோம்.
ஆறுமாதகால தமிழ் சினிமாவில் நிஜமான ஆச்சரியம் 'சென்னை 600028.' கொஞ்சம் விடலை பசங்கள். டென்னிஸ் பந்தில் தெரு கிரிக்கெட். ஆளுக்கொரு சீன், கேரக்டருக்கொரு ஜோடி என்ற ஃபார்முலா நஹி. துண்டு துண்டாக சில கதைகள். முற்று பெறாத கிளைமாக்ஸ். தமிழில் இப்படியொரு படத்தை யோசிக்க தைரியம் வேண்டும். அந்த தைரியசாலி வெங்கட் பிரபுவும், அவருக்கு தைரியம் தந்த தயாரிப்பாளர் சரணும் பாராட்டுக்குரியவர்கள். 2007-ம் ஆண்டின் முதல் ஆறுமாதகால தமிழ் சினிமாவின் மேன் ஆஃப் தி மேட்சை இவர்கள் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். சிறப்புப் பரிசு பெறுகிறவர்கள் ராதாமோகன் & பிரகாஷ்ராஜ்.
அடுத்த ஆறு மாதத்தில் பீமாக்களும் கிரீடம் தரித்தவர்களும் தசாவதாரங்களும் வர இருப்பதால் தமிழ் சினிமாவின் லாபம் கணிசமாக உயரும் என நிச்சயமாக நம்பலாம். நம்புவோம்!